ராமா ராமா
ராகம்: அடானா
ராமா ராமா என்று சொல் மனமே
நாவிற்கினிய நாமம் தன்னை துதி மனமே
கோசலை குமாரனை ரகுகுல திலகனே
போற்றிப் பாடுவாய் அனுதினமே .... ( ராமா ராமா)
ராகம்: சாரங்கா
தாடகை சுபாஹுவை வதைத்தவனை
மாமுனி வேள்வியை காத்தவனை
கல்லுருவாய் நின்ற அகலிகையின்
சாபத்தை போக்கிய நாரணனை .... ( ராமா ராமா )
ராகம்: வஸந்தா
சிவத்தனுசை முறித்த சுந்தரனை
ஜானகியை மணந்த சீதாராமனை
தந்தை சொல் காக்க வனம் புகுந்தவனை
தம்பி பரதனுக்கு அரசு தந்தவனை ... ( ராமா ராமா)
ராகம்: பூபாளம்
மாரீச மாயனை கொன்றவனை
வஞ்சத்தால் சீதையை இழந்தவனை
அனுமன் பூஜித்த ஸ்ரீராமனை
சுக்ரீவன் நட்பை பெற்றவனை .... ( ராமா ராமா )
ராகம்: சஹானா
வாலியை வதம் செய்த மாவீரனை
அபயமென அடைந்த விபீடணனை
தஞ்சமென்று வந்தால் பகைவரையும்
காத்திடுவேன் என்று சொன்னவனை .... ( ராமா ராமா )
ராகம்: பிலஹரி
கடல் கடக்க சேது அமைத்தவனை
முழங்கி எழுந்த கும்பகர்ணனை
வீரியம் மிகுந்த ராமபாணத்தால்
மலை போல் தரையில் சாய்த்தவனை ... ( ராமா ராமா )
ராகம்: ஷண்முகுப்ரியா
தசமுகனாம் கொடிய ராவணனை
போரினில் மாய்த்த ஜெயராமனை
சீதை மனம் குளிர தேவர் குலம் மகிழ
பூதேவியை தன்னுள் அணைத்தவனை ... ( ராமா ராமா )
ராகம்: மோகனம்
அயோத்தி நகர் மீண்ட அயோத்தி ராமனை
அரசுரிமை அடைந்த பட்டாபிராமனை
ரகுகுல விளக்கை சுகுமாரனை
போற்றிப் பாடுவாய் அனுதினமே .... ( ராமா ராமா )
ராகம்: கேதார கௌளை
அரக்கர் குலம் அழிக்க தோன்றியவனை
நாட்டில் நலம் செழிக்க செய்தவனை
இன்று நாம் சேவிப்போம் திருமலையில்
ஸ்ரீராமனை திருவேங்கடவனை .... ( ராமா ராமா )
ராகம்: மத்யமாவதி
சக்ரவர்த்தி திருமகனுக்கு ஜெய மங்களம்
சௌபாக்ய சொரூபனுக்கு ஜெய மங்களம்
பட்டாபிராமனுக்கு சுப மங்களம்
ஸ்ரீனிவாசனுக்கு சுப மங்களம்
Click Here for AUDIO ( under construction)